Communism: இளம் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு

சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு படிப்பினை. சிறிய புத்தகம் தான் என்றாலும் சொல்ல வந்த விஷயங்கள் மிகவும் பெரியவை. இளைய சமூகம் புதியதோர் பொதுவுடைமை சமூகத்தை கட்டமைக்க என்ன செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்களான லெனின் மற்றும் பகத் சிங் ஆகியோர் பேசியதையும், எழுதியதையும் தொகுத்து வழங்கியுள்ளனர். பொதுவாக கம்யூனிசம் பற்றிய புத்தகங்கள் தத்துவார்த்த ரீதியில் கடினமான கருத்துகள் நிறைந்ததாக இருக்கும். இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப படிக்க வேண்டும். அதே குறையை இதிலும் உணர்கிறேன். அதுமட்டுமின்றி நீண்ட வாக்கியங்கள் சோர்வை ஏற்படுத்துகின்றன. இந்த விஷயத்தை பகத் சிங்கும் கூறியிருப்பது எத்தகைய பொருத்தம் பாருங்கள்.

அவருடைய வரிகளாக இடம்பெற்றவை: ’பொதுவுடைமை கொள்கைகள் பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புத்தகங்கள் வெளிவர வேண்டும். அவை எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். எளிமையாக தெளிந்த நடையிலும் எழுதப்பட வேண்டும்’. இருப்பினும் புத்தகத்தின் சாராம்சத்தை, நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. கம்யூனிஸ்ட்டாக உருவெடுக்க விரும்பும் நபர்கள், வெறுமனே கட்சி பிரசுரங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என வறட்டு சூத்திரம் பயின்றால் மட்டும் போதாது. அறிவியல் பயில வேண்டும். அதிலும் முதலாளித்துவ சமூகம் கட்டியமைத்த தொழில்நுட்ப விஷயங்களில் நமக்கானவற்றை புறந்தள்ளி விடக்கூடாது.

அடுத்த தலைமுறைக்கு பொதுவுடைமை பற்றிய புரிதலை வரலாற்று பாடங்கள், சமகால உதாரணங்கள் மூலம் எடுத்துச் சொல்ல வேண்டும். புதியவர்களை கட்சிக்குள் அரவணைத்து சித்தாந்த ரீதியில் களப்பணியாற்றும் தோழர்களாக பட்டை தீட்ட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும் வர்க்கங்கள் என்றால் என்னவென்று தெளிவுபடுத்துகிறது. சமூகத்தின் ஒரு பகுதி, மறு பகுதியின் உழைப்பை தனதாக்கிக் கொள்ள உதவுபவை ஆகும். அதாவது, சமூகத்தின் ஒரு பகுதியானது நிலம் அனைத்தையும் தனதாக்கிக் கொண்டால் நிலப் பிரபுக்கள், விவசாயிகள் என்னும் வர்க்கங்கள் தோன்றுகின்றன. சமூகத்தின் ஒரு பகுதி தொழிற்சாலைகளையும், ஆலைகளையும் சொந்தமாக்கிக் கொண்டு பங்கு பத்திரம், மூலதனம் ஆகியவற்றை உடைமையாக்கிக் கொண்டிருந்து,

மறு பகுதி இந்தத் தொழிற்சாலைகளில் வேலை செய்தால் முதலாளிகள், தொழிலாளிகள் என்ற வர்க்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக 1931ல் வாக்குரிமை பற்றி பகத் சிங் எழுதியிருப்பதன் மூலம் அக்காலச் சூழலை உணர முடிகிறது. அதாவது, ஒருவரை வாக்களிக்க தகுதியானவராகச் செய்யும் சொத்துத் தகுதிகள் முழுவதும் நீக்கப்பட வேண்டும். அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை அமல்படுத்தப்பட வேண்டும். வயது வந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் வாக்குரிமை பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அரசு வைத்திருக்கும் மேலவை என்ற விஷயத்தை முதலாளித்துவ போலித்தனம், சூழ்ச்சி என்று பகத் சிங் விமர்சிக்கிறார். ஒரேவொரு அவையை கொண்ட அரசாங்கமே நாம் எதிர்பார்க்கக் கூடிய சிறந்த ஒன்றாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

அத்தோடு நிற்காமல் சட்டமன்றத்திற்கும் மேலாக உயர்ந்த அசாதாரண அதிகாரங்கள் உடன் மேலிருந்து திணிக்கப்படும் ’ஆளுநர்’ ஒரு கொடுங்கோலர் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக ”புரட்சி நீடுழி வாழ்க”, ”இன்குலாப் சிந்தாபாத்”, ”லால் சலாம்”, ”செவ்வணக்கம்” என்று முழக்கமிடும், முழக்கமிட ஆசைப்படும் தோழர்களுக்கானது இந்தப் புத்தகம். அவர்கள் அறிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தை படிப்பதற்கு நிறைய பொறுமையும், ஆழமான பார்வையும் இருப்பது அவசியம். சக தோழர்களுடன் விவாதித்தால் புரிதல் சாத்தியப்படக்கூடும்.

Write a comment ...

Write a comment ...