Celebration: பிறந்த நாள் பரிசு

நீண்ட நாட்களுக்கு பின்னர் எழுதும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த நண்பன் மோகனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து நண்பன் மரியா உடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது சேலத்தில் என்னுடன் ஒன்றாக இளங்கலை கணித பட்டப்படிப்பு படித்த நண்பன் மோகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நாங்கள் பேசி கிட்டதட்ட ஓராண்டிற்கும் மேல் இருக்கும். சமூகம் சார்ந்த உரையாடலை எங்களுக்குள் அதிகம் செய்திருக்கிறோம். ஆனால் அவர் அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை எடுக்காததால் சற்று கோபத்தில் இருந்தேன். இருப்பினும் ஆர்வத்துடன் தொடங்கிய பேச்சு எல்லாவற்றையும் மறக்கடிக்க செய்தது. வேலையை தவிர்த்து சமூகத்திற்கான பயணம் எப்படி போய் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, முதலாளித்துவ சமூகம் என்னை எப்படி முடக்கி வைத்திருக்கிறது என்று மனக் குமுறல்களை வெளிப்படுத்தினேன். பொதுவாக என்னை போன்றவர்களை எல்லாம் ”வேலைப் பிரியர்கள்” என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் ஒரு வேலையை ஒப்படைத்து விட்டால், அதை 100 சதவீதம் முழுதாக முடித்துக் கொடுக்க மணிக் கணக்கில், நாள் கணக்கில் வேலை பார்ப்போம். இதனால் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க முடியாமல் குடும்ப வாழ்வில் சிதைந்து போவோம். கடந்த சில ஆண்டுகளாக எனக்குள் பெரிதாய் எழுந்த ஆர்வம் எழுத்து, புத்தகம், அரசியல். இவற்றை ஒருங்கிணைத்து ஒரு புத்தகமாய் எழுதிவிட வேண்டும் என்று மனம் தவியாய் தவித்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முதலாளித்துவ சமூகம் வேலை மேல் வேலையாக கொடுத்து என்னை முடக்கி வைத்திருக்கிறது. இப்படியான வேலை, பொறுப்பு காலத்தின் தேவை என்றாலும் எனக்கு சமாளிக்க தெரியவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி ஓர் உரையாடலுக்கு என்னை தேடி வருபவர்கள் மிகவும் குறைவு. அதேசமயம் முடிந்தவரை என் சிந்தனையை ஒத்த நண்பர்களுடன் அவ்வப்போது பேசி சற்று நிம்மதி அடைந்து கொள்வேன். இப்படியாக பேச்சு நீண்டு கொண்டிருக்க திராவிட அரசியல் குறித்து பேச வேண்டிய சூழல் வந்தது.

அதற்கு, நீதிக் கட்சியில் விதையாக போட்டு திராவிடக் கழகத்தால் செடியாக வளர்க்கப்பட்டு திராவிட அரசியல் கட்சிகளால் ஆல மரமாய் வளர்ந்து நிற்கிறது தமிழ்நாடு. சுமார் 55 ஆண்டுகள் நமது மாநிலம் சிறக்க திராவிடக் கட்சிகள் ஏராளமாய் செய்து கொடுத்துள்ளன. இதில் அரசியல்வாதிகளை குறை சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அரசியலை விமர்சிக்க எதுவும் இல்லை. மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று கூறுவார்கள். அதுபோல நம்முடைய தமிழகத்திற்கு திராவிட சித்தாந்தமே சரி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்தளவிற்கு திராவிட கலப்பையால் நமது தமிழ் மண் உழப்பட்டிருக்கிறது. அதேசமயம் அரசியல்வாதிகள் செய்யும் பிழைப்புவாத செயல்பாடுகளால் சித்தாந்தத்தை விமர்சிப்பது சரியாக இருக்காது. அதற்காக அவர்கள் செய்யும் சமரசங்களையும் ஏற்க முடியாது. இதையடுத்து சாதி ரீதியிலான அடையாளம் குறித்து பேசலாயிற்று. இங்கே சாதி உயர்ந்து நிற்கும் போது, அதற்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டே ஆக வேண்டும்.

சாதி சான்றிதழ் வேண்டாம் என்று கூறுவதும், இங்கே சாதி இல்லை என்று கூறுவதும் முற்றான மூடத்தனம். சாதி முழுவதும் ஒழியும் வரை அதற்கு பிரநிதித்துவம் கொடுப்பதை தவிர்க்கவே கூடாது. இதற்காக அடுத்த 100 ஆண்டுகளுக்கு மேல் நாம் உழைக்க வேண்டும். அதுவரை நாம் இருக்க போவதில்லை என்று ஒதுங்கி கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இத்தகைய ஏற்ற, தாழ்வுகள் அற்ற, சாதி, மதம் பார்க்காத மனப்பான்மையை உருவாக்க ஒத்த சிந்தனை உடைய நபர்கள் ஒன்றுசேர வேண்டும். அவர்கள் தங்களுக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது அரசை குறை சொல்லவோ, வேறு சித்தாந்தங்களை விமர்சிக்கவோ, போராட்டங்களை முன்னெடுக்கவோ பயன்படக் கூடாது. சமூக மாற்றத்திற்கான கருத்துகளை தொடர்ந்து உரையாட வேண்டும். இத்தகைய அமைப்புகள் தெருக்கள், கிராமங்கள், நகரங்கள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிவோர் என பல்வேறு மட்டங்களில் உருவாக வேண்டும்.

ஒருகட்டத்தில் இந்த அமைப்புகள் ஒன்றிணையும் போது, அது தமிழ்நாட்டிற்கு புதுவித எழுச்சியை தரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தற்போதைக்கு சாதி ரீதியிலான இடஒதுக்கீடு தான் அவசியமே தவிர. பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு கிடையாது என்று பேசத் தொடங்கினோம். தமிழ்ச் சமூகத்தை பொறுத்தவரை வர்க்கம் என்பதை விட சாதி என்பது தான் உயர்ந்து நிற்கிறது. எனவே சாதி அடுக்குகளை சமன்செய்யும் வேலையை தான் நாம் முதலில் செய்து முடிக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடலும், அரசின் செயல்பாடுகளும் அதிகப்படியாகவே அரங்கேற வேண்டும். அதன்பிறகே வர்க்கப் பேதங்களை நோக்கிய பயணம் தொடங்கப்பட வேண்டும். இப்படியான பேச்சு எனக்குள் இருந்த அரசியல் பார்வையை நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒருமுறை அசை போட வைத்தது. எனக்குள் பொதுவுடைமை அரசியலின் விதை செடியாக வளர்ந்திருந்தாலும், திராவிடத்தை விட்டுக் கொடுக்க ஒருபோதும் மனம் வந்ததில்லை. அதுவும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூழலில் நேற்றைய இந்த உரையாடல் மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசாக அமைந்துவிட்டது. அரசியல் பேசுவோம். இன்னும் நிறைய...

Write a comment ...

Write a comment ...