2018ல் நடந்த FIFA கால்பந்து உலகக்கோப்பையில் லேசாக பிறந்த ஆர்வம், அடுத்து வந்த English Premier League-ல் தீயாய் பற்றிக் கொண்டது. நான்கு ஆண்டுகளில் பல்வேறு லீக்குகள், Euro 2020, Copa America, Africa Cup of Nations என ஓரளவு கால்பந்து குறித்து விவரம் தெரிய ஆரம்பித்தது. நடப்பாண்டு அடுத்த உலகக்கோப்பைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். இம்முறை சற்றே விவரம் தெரிந்தவனாக தொடரை முழுவதுமாக கண்டு ரசித்து, ஆழமாக அலசி ஆராய்ந்து, என்னுடைய எழுத்துகளால் கொண்டாடி தீர்க்கக் காத்திருக்கிறேன். இதில் முத்தாய்ப்பாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. ஆம்... வேல்ஸ் கால்பந்து அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றதை தான் இங்கே சொல்கிறேன். கடைசியாக 1958ஆம் ஆண்டு நடந்த FIFA உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றிருந்தனர்.
அதில் இரண்டு ஆட்டங்கள் மட்டும் விளையாடிய நிலையில், காலிறுதி சுற்றில் பிரேசில் அணியுடன் மோதியது. அப்போது எனது பேவரைட் கால்பந்து ஹீரோ Pele அடித்த ஒற்றை கோல் பிரேசிலை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. இந்த ஒருமுறை மட்டுமே உலகக்கோப்பை தொடரில் வேல்ஸ் அணி பங்கேற்றிருந்தது. இந்நிலையில் 2022 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற பல்வேறு சுற்று ஆட்டங்கள் நடந்து வந்தன. அதில் இறுதியாக உக்ரைன் அணியுடன் வேல்ஸ் மோத வேண்டியிருந்தது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட அணியில் திறன் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும், அவர்கள் கடந்த சீசனில் பெரிதாக ஜொலிக்காதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். கேப்டன் Gareth Bale 2021-22 சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக 290 நிமிடங்கள் மட்டுமே ஆடினார்.
Aaron Ramsey ரேஞ்சர்ஸ் அணிக்காக மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடினார். அதுவும் Europa League இறுதிப் போட்டியில் 118வது நிமிடம் வரை வரவே இல்லை. கீப்பர் Wayne Hennessey பர்ன்லி அணிக்காக போதுமான அளவில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. Joe Rodon டாட்டன்ஹாம் அணிக்காக பிப்ரவரியில் இருந்து வெறும் 22 நிமிடங்கள் மட்டுமே விளையாடி இருந்தார். Kieffer Moore பவுர்ன்மவுத் அணிக்காக 4 முறை மட்டுமே விளையாடினார். பயிற்சியாளர் Robert Page 2017ல் நார்தாம்ப்டன் அணியில் இருந்து நீக்கப்பட்டவர். இப்படி ஏராளமான குறைகளை சொல்லலாம். ஆனால் இவர்கள் தேசிய அணிக்காக ஜெயித்து காட்டியிருக்கிறார்கள். தங்களை முழுமையாக நிரூபித்துள்ளார்கள்.
தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய வேல்ஸ் அணியினர் கடைசி வரை ஒரு கோல் கூட விடவே இல்லை. ஆனால் உக்ரைன் செய்த தவறு ஒட்டுமொத்த வரலாற்றையும் புரட்டி போட்டு விட்டது. அந்த அணியின் Andriy Yarmolenko அடித்த Own Goal ஒட்டுமொத்த உக்ரைன் ரசிகர்களின் மனதையும் நொறுக்கியது. அதுவே 96வது நிமிடத்தில் வேல்ஸ் அணி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளிவிட்டது. ஒட்டுமொத்த Cardiff City அரங்கும் கொண்டாட்டத்தில் திளைக்க உலகக்கோப்பைக்குள் நுழைந்தது வேல்ஸ் அணி.
ஏற்கனவே வேல்ஸ் நாட்டின் தேசிய விளையாட்டான Rugby-ஐ கால்பந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் உலகக்கோப்பைக்கு அந்த அணி தகுதி பெற்றதால், கால்பந்தை மற்ற விளையாட்டுகளை காட்டிலும் ரசிகர்கள் உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டனர். தற்போது Wales கால்பந்து அணியின் ரசிகர்கள் "We are going to Qatar" என்ற பாடலை பல்வேறு ராகங்களில் மாற்றி மாற்றி பாடி வருகின்றனர். வாழ்த்துகள் வேல்ஸ். சந்திப்போம் உலகக்கோப்பை களத்தில்...
Write a comment ...