கிரிக்கெட்டை தாண்டி வேறெதுவும் தெரியாத நிலையில் கால்பந்தின் மகிழ்ச்சியை ஒவ்வொரு நொடியும் அள்ளிப் பருக அச்சாரம் போட்டது 2018 ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை. பெங்களூருவில் வேலை பார்த்து கொண்டிருந்த போது சக ஊழியர்களாக பணியாற்றிய கேரள நண்பர்களின் கால்பந்து மீதான ஆர்வம் அப்போது என்னை திகைக்க வைத்தது. அவ்வப்போது ஓரிரு போட்டிகளில் சில நிமிட ஆட்டத்தை மட்டும் பார்த்தேன். அதன்பிறகு கால்பந்து போட்டிகள் தொடர்பான செய்திகளை தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். சரியாக ஓராண்டு கழித்து 2019ல் ஐரோப்பாவின் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் வென்றது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த சிவப்பு நிறமும், லிவர்பூல் பின்னணியில் அமைந்த பொதுவுடைமை சித்தாந்தமும் என்னை கட்டி போட்டன. அதன் உச்சபட்சமாக லிவர்பூல் பயிற்சியாளர் ஜர்கன் க்ளோப்பின் அணுகுமுறைகள், ஆட்ட நுணுக்கங்கள் ஆர்வத்தை தூண்டின. இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் ரசிகராக மாறினேன். லிவர்பூல் அணியின் Die Hard ரசிகராக உருவெடுத்தேன்.
தொடர்ந்து மூன்று சீசன்கள் பார்த்து முடித்த நிலையில் யூரோ 2022 தொடர் ஆரம்பித்தது. ஐரோப்பிய தேசிய கால்பந்து அணிகள் மீதான ஆர்வம் பீறிட்டு கிளம்ப நள்ளிரவில் கொட்ட கொட்ட கண் விழித்து போட்டிகளை பார்த்தேன். அதை முதல்முறை தமிழ் வர்ணனையில் கேட்க ஒவ்வொரு போட்டியும் ரம்மியமானது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆட்ட நுணுக்கங்கள், சாதனைகள், ஐரோப்பாவில் இருக்கும் கால்பந்து கோப்பைகள், அவற்றின் படிநிலைகள் என பல விஷயங்கள் தெரிய ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் கேரள ரசிகர்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு கால்பந்து ஆட்டத்தில் மூழ்க ஆரம்பித்தேன். இப்படியொரு சூழலில் இனிக்க இனிக்க இன்ப ரசமாய், கேட்க கேட்க தேனிசை தென்றலாய் வந்து சேர்ந்தது 2022 கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடர். போட்டி அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டியது முதல் போட்டி தொடங்கும் நேரத்திற்கு அலாரம் வைத்தது வரை எல்லாம் கச்சிதமாக தயார் செய்து கொண்டேன். ஆனால் கத்தாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் என்னை கலங்கும்படி செய்தது.
அவர்களின் மரணத்தை அந்நாட்டு அரசு மூடி மறைக்க செய்த வேலைகள் கோபத்தை கொந்தளிக்க வைத்தது. அரபு உலகின் முதல் கால்பந்து உலகக்கோப்பை என்ற பெருமை ஒருபுறமிருக்க, அதற்கான பிரம்மாண்டத்தை கட்டி எழுப்பியதில் ஆசியாவின் அடித்தட்டு தொழிலாளர்களின் பங்கு அளப்பறியது. கூடவே கத்தார் அரசின் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான நிலைப்பாடும் சர்ச்சையாக மாறியது. இதையெல்லாம் கவனித்த ஐரோப்பிய கால்பந்து வீரர்கள் One Band எனப்படும் கைப்பட்டை அணிய முடிவு செய்தனர். இதற்கு, அனைத்து விதமான பாலின ஈடுபாட்டையும் நாங்கள் ஆதரிக்கிறோம். நாங்கள் யாரிடமும் பேதம் பார்க்கவில்லை என்று அர்த்தம். உலகக்கோப்பையில் வீரர்கள் கலந்து கொள்வதால் அவர்கள் விளையாடும் கிளப்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் ஃபிஃபா பல கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்கும் விஷயமும் அப்போது தான் தெரியவந்தது. பார்சிலோனா முதல் லிவர்பூல் வரை ஏராளமான கிளப்களில் கைகளில் பண மழை.
இந்த தொடர் ஆரம்பிக்கும் நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி குறித்து வம்படியாக சில விஷயங்களை பேசி தனது இங்கிலீஷ் பிரிமியர் லீக் தொடருக்கு இறுதி அத்தியாயம் எழுதினார் ரொனால்டோ. கேரளா முதல் பியூனஸ் ஐரிஸ் வரை கொண்டாட்டங்கள், கட் அவுட்கள், விளம்பரங்கள் என கால்பந்து ரசிகர்களின் செயல்பாடுகள் வேற லெவலுக்கு சென்றன. குறிப்பாக மெஸ்ஸியும், ரொனால்டோவும் செஸ் ஆடுவது போல் வெளியான புகைப்படம் உலகக்கோப்பை தீயை மனதில் பற்ற வைத்தது. முதல் போட்டி கத்தார் vs ஈக்வடார். இதில் ஈக்வடார் என்ற அணியை அப்போது தான் முதன்முதலில் பார்க்கிறேன். டபுள் கோல் அடிச்ச என்னர் வேலன்சியா முதல்முறை எனக்கு அறிமுகமானார். அதேசமயம் முதல்முறை உலகக்கோப்பையிலும் சாதனை படைத்தார். அடுத்த ஈரானை துவம்சம் செஞ்ச இங்கிலாந்து அணியின் இளம் பட்டாளம். இந்த அணி வீரர்களின் சராசரி வயது 26. 6-2 என கோல் மழை பொழிந்து அதகளம் செய்துவிட்டார்கள்.
இங்கிலாந்து அணியில் கோல் அடித்த ஜூட் பெல்லிங்ஹாம் முதல் க்ரீலிஷ் வரை அத்தனை பேரும் ஏற்கனவே அறிமுகமான நபர்கள் தான். எனவே இந்த போட்டியை பார்க்கும் போது உற்சாகம் சற்று கூடுதலாகவே காணப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் எனக்கு பிடித்தமான வீரர்களில் ஒருவர். அடுத்ததாக 64 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்ற வேல்ஸ். அமெரிக்கா உடன் மோதிய போட்டியில் கேப்டன் கரீத் பேல் ஒரு கோல் அடித்து சமன் செய்திருப்பார். இவர் உலகக்கோப்பையில் அடித்த ஒரே ஒரு கோல் இதுதான். இதையடுத்து சவுதி அரேபியா உடனான போட்டியில் மெஸ்ஸி அடித்த முதல் கோல் ரசிக்கும் படியாக அமைந்தது. பதிலுக்கு இரண்டு கோல்கள் அடித்து தோல்வியை பரிசாக தந்தனர் சவுதி வீரர்கள். அதுவும் போட்டிக்கு நடுவே மெஸ்ஸியிடம் சென்று நீங்கள் இன்று ஜெயிக்க மாட்டீர்கள் என்று கூறி அதை செய்தும் காண்பித்தனர். அதன்பிறகு சவுதியில் ஒருநாள் லீவு விட்டு கொண்டாடியது எல்லாம் வேற லெவல் ஏற்பாடு. பின்னர் ஆஸ்திரேலியா உடனான போட்டியில் 1-4 என பிரான்ஸ் புகுந்து விளையாடியது.
ஒலிவியர் ஜிரவுட் இந்த தொடரில் தான் எனக்கு அறிமுகமானார். எம்பாப்பே, கிரீஸ்மன், டெம்பாலே ஆகியோரை ஏற்கனவே தெரியும். இதனால் அவர்களின் ஆட்டத்தை வெகுவாக ரசிக்க முடிந்தது. அப்புறம் ஜெர்மனி, ஸ்பெயின் என முன்னாள் உலக சாம்பியன்களை ஜப்பான் மண்ணை கவ்வ வைத்த சம்பவம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக முதல் சுற்றிலேயே ஜெர்மனி வெளியேறும் அளவிற்கு நிலைமை சென்றுவிட்டது. ஸ்பெயின் முதல் போட்டியில் 7-0 கோஸ்டா ரிகாவை தெறிக்க விட்டு தட்டு தடுமாறி ரவுண்ட் ஆஃப் 16 வந்து சேர்ந்தது. ஆனால் அபாரமான மொராக்கோ உடன் தோல்வியை தழுவி வெளியேறியது வேறு கதை. முகத்தில் மாஸ்க் உடன் களமிறங்கி கவனம் ஈர்த்தார் தென்கொரியாவின் சன் ஹுங் மின். இவர்கள் போர்ச்சுகலை சம்பவம் செய்து ரவுண்ட் ஆஃப் 16 வந்து சேர்ந்தனர். இதையடுத்து கானாவிற்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து தொடர்ந்து 6 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த சாதனையை படைத்தார் ரொனால்டோ.
இதற்கிடையில் பிரேசிலின் நெய்மருக்கு முதல் போட்டியிலேயே காயம் ஏற்பட அப்படியே 2014 பிளாஷ்பேக் மனதில் வந்து போனது. மீண்டும் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தென் கொரியாவிற்கு எதிராக ரவுண்ட் ஆஃப் 16ல் திரும்பினார். ஆனால் காலிறுதியில் குரோஷியா உடன் தோற்றது பெரிய சோகம். நெய்மர் குழந்தை போல கண்ணீர் விட்டு அழுதது ஒருபுறம் கிண்டல் செய்யப்பட்டாலும் தோல்வியின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது. மெக்சிகோவின் கோல் கீப்பர் குல்லெர்மோ ஓச்சா பெருஞ்சுவர் போல அந்த அணிக்கு பலமாக திகழ்ந்தார். ஆனால் ஒரு தோல்வி, ஒரு டிரா, ஒரு வெற்றி என முதல் சுற்றிலேயே டாடா பைபை சொல்லிவிட்டது. பெல்ஜியம் அணியை கோல்டன் ஜெனரேஷன், அது, இது என்றெல்லாம் எதிர்பார்ப்பை கிளப்பினர். டி புருனே, லுகாகுவிடம் நானும் பெரிதாக எதிர்பார்த்தேன். கடைசி லீக் போட்டியில் குரோஷியா உடன் லுகாகு பல வாய்ப்புகளை மிஸ் பண்ணது செம கடுப்பை கிளப்பியது. வெளியே போங்க பாய்ஸ் என்று சொல்லும் அளவிற்கு கொண்டு போய்விட்டது.
ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த மொராக்கோ ஆடியது எல்லாம் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஆட்டம். லீக் சுற்று, ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதி, 3வது இடத்திற்கு போட்டி என புதிய சாதனை படைத்தனர். எந்தவொரு ஆப்பிரிக்க கால்பந்து அணியும் செய்யாததை செய்து காண்பித்தனர். இந்த அணியின் வாலிட் ரெக்ராகுயின் வரலாற்றை தேடிப் பார்த்தது எல்லாம் அற்புதமான அனுபவம். அரையிறுதிக்கு தகுதி பெற்றதை கொண்டாடும் வகையில் சோஃபியானே ஃபவுஃபால் தனது தாயின் கையை பிடித்து கொண்டு மைதானத்தில் ஆடியது ஆனந்த தாண்டவம். அப்படியே படம் பிடித்து வீட்டில் பெரிதாக மாட்டிக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது. இதேபோல் 20 ஆண்டுகளுக்கு பின்னர் செனகல் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த இரண்டு முறையும் அந்த அணியின் தூணாக இருந்தவர் அலியூ சிஸ்சி. 2002ல் செனகல் அணி கேப்டனாக முதல்முறை நாக்-அவுட் சுற்றுக்கு அழைத்து சென்றார். 2022ல் செனகல் அணி பயிற்சியாளராக நாக்-அவுட் சுற்றுக்கு அழைத்து சென்றார்.
ஆனால் இங்கிலாந்து உடன் தோல்வியை தழுவி ரவுண்ட் ஆஃப் 16 உடன் வெளியேறியது. போலந்து அணி ரவுண்ட் ஆஃப் 16 வரை சென்றாலும் அந்த அணியின் ஜாம்பவான் ராபர்ட் லெவன்டவ்ஸ்கி ஒரே ஒரு கோல் அடித்த தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றி கொண்டார். இதற்கிடையில் பிரேசில் ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை குறித்த செய்திகள் வெளியாகி சங்கடத்தை ஏற்படுத்தின. எப்படியோ மன உறுதியுடன் இன்று வரை தனது இருப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறார். ஈரானின் தேசியக் கொடியில் அல்லாவின் சின்னத்தை தவறவிட்ட அமெரிக்கா, வாயை மூடி போஸ் கொடுத்த ஜெர்மனி வீரர்கள், One Band கைப்பட்டை அணியும் முடிவை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்ட ஐரோப்பிய அணிகள், ரெயின்போ நிற கொடியை பிடித்து கொண்டு மைதானத்திற்குள் ஓடிய இத்தாலிய ரசிகர், தேசிய கீதத்திற்கு வாய் அசைக்காமல் இருந்த ஈரான் அணி, இஸ்ரேல் ஊடகவியலாளர்களை அரபு ரசிகர்கள் மோசமாய் கிண்டல் செய்தது என ஆழமாய் பார்க்க வேண்டிய அரசியலும் ஏராளமாய் அரங்கேறின.
கடந்த உலகக்கோப்பை தொடரை போலவே மக்கள் மனங்களை வென்ற அணியாக குரோஷியாவும், அதன் கேப்டன் லூகா மோட்ரிச்சும் திகழ்ந்தனர். ரொம்பவும் ஒழுக்கமான ஆட்டம் எனச் சொல்லலாம். தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடாத ஒரு அணி என்றால் குரோஷியா தான் நினைவுக்கு வரும். இந்த தொடரில் கலக்கிய இளம் வீரர்கள், கோல் கீப்பர்கள் என்னை பெரிதும் கவர்ந்தனர். அப்புறம் இறுதி போட்டியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. பெரும்பாலான கால்பந்து ரசிகர்களை போலவே எனக்கும் மிக மிக பிடித்த ஒரு போட்டி. வாழ்நாளில் கிடைத்திராத அனுபவம். சோர்வின் உச்சத்தில் இருந்து இருக்கையின் நுனிக்கு அழைத்து சென்ற கிலியன் எம்பாப்பே ஆட்டமெல்லாம் மறக்கவே முடியாது. சும்மா இந்த தொடரில் கிழிச்சி விட்டுட்டார். இப்பவே எழுதி வச்சுக்க வேண்டியது தான். மெஸ்ஸி, ரொனால்டோ எல்லாம் ஓரம்போங்க. எம்பாப்பே புதிய சாதனைகள் படைக்க வரார்... வரார்... மெஸ்ஸியின் அர்ஜென்டினாவையும் சும்மா சொல்லிவிட முடியாது. இடையில் சர்ச்சைகளில் சிக்கினாலும் ஒவ்வொரு போட்டியிலும் தரமான ஆட்டம். மெஸ்ஸியின் வாழ்நாள் கனவு மட்டுமின்றி அந்த அணியின் இளம் வீரர்களுக்கு புதிய உலகை திறந்துவிட்டிருக்கிறது. இந்த வெற்றி டியகோ மரடோனாவை பற்றி என்னை நிறைய படிக்க, பார்க்க தூண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக,
Its Ok பிரேசில்...
Lovely மொராக்கோ...
So Sweet குரோஷியா...
Master Blaster பிரான்ஸ்...
Good Job அர்ஜென்டினா...
Write a comment ...