
ஆல்வரோ மார்டே என்றால் பலருக்கும் தெரியாது. ’Professor’ அல்லது ’செர்ஜியோ மார்குய்னோ’ அல்லது ’சால்வா’ என்றால் உலகம் முழுவதும் உள்ள Money Heist ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். ஸ்பெயின் நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி சுமாரான வெற்றியை பெற்ற தொடர். அதை Netflix வாங்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட உலகம் முழுவதும் சக்கை போடு போட்டது. உலகின் பிரபல நகரங்களின் பெயர்களை தாங்கி ஏராளமான கதாபாத்திரங்கள் இந்த சீரியலில் இருந்தாலும், Professor தான் எல்லோரையும் விட அதிகமாக வசீகரிப்பார். அந்த அளவிற்கு அழுத்தமாக, அதீத புத்திசாலியாக அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரது நடை, உடை, பாவனை உள்ளிட்டவற்றை அப்படியே பிரதி பிம்பம் எடுத்து உலகின் பல்வேறு பிரபலங்களும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாகி வருகின்றனர்.
அந்த பெருமைக்கு சொந்தக்காரரான அல்வாரோ மார்டே-வின் வாழ்க்கை பெரிதும் வலிகள் நிறைந்தது. இதனை யூடியூப் பிரபலங்கள் பலரும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர். அதை கேட்க கேட்க உத்வேகம் ஊற்றெடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இலக்கை நோக்கிய பயணமும், தடைகளை உடைத்தெறியும் தைரியமும் இருந்தால் நிச்சயம் வெல்லலாம் என்பதை உணர்த்துகிறது. ஆல்வரோ மார்டே, வயது 46. ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்ஜெசிராஸ் என்ற சிறிய கிராமத்தில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவரது தாய்மொழி ஸ்பானிஷ். சிறு வயது முதலே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிகளில் நாடகங்களில் நடித்துள்ளார். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பின்னர், கல்லூரியில் Communication Engineering படிப்பை தேர்வு செய்கிறார். இவரது கல்லூரியில் கலை சார்ந்த படிப்புகளும் இருக்கின்றன.
இந்த சூழலில் ஒருமுறை வகுப்பு நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது நடிப்பின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். இந்த படிப்பை படித்து கொண்டே நடிக்க முயற்சி செய்வேன் என்கிறார். அதற்கு அந்த நண்பர், அதே கல்லூரியில் Dramatic Art என்ற படிப்பு இருக்கிறது. அதை படித்தால் எதிர்காலம் சரியான பாதையை நோக்கி செல்லும் என்று அறிவுரை வழங்குகிறார். அடுத்த சில நாட்களில் Dramatic Art படிப்பிற்கு மாறி விடுகிறார். இது நான்கு ஆண்டுகள் கொண்ட படிப்பு. இதை படித்து முடித்த பின்னர் நடிப்புத் துறையில் முதுகலை பட்டமும் பெறுகிறார். 1999 முதல் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி அலைகிறார். ஆனால் நடிக்க தெரியவில்லை. முகம் சரியில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் யாருமே வாய்ப்பு வழங்கவில்லை. அதன்பிறகு Hospital Central என்ற சீரியலில் வாய்ப்பு கிடைக்கிறது.
அதுவும் மிகச் சிறிய கதாபாத்திரம். வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. 2002 முதல் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. அனைத்தையும் விடாமல் பயன்படுத்தி கொள்கிறார். ஆனால் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. 2007ல் Planta 25 என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரமாக வாய்ப்பு கிடைக்கிறது. அடுத்த நான்கு ஆண்டுகள் சில சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும் பெரிய அளவில் அங்கீகாரம் இல்லை. 2011 வாக்கில் ஆல்வரோ மார்டே-வின் பெயர் கொஞ்சம் பிரபலமாகிறது. அந்த சூழலில் திடீரென பயங்கரமான கால் வலி வருகிறது. பல மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்கிறார். எங்கு மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. வலி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒரு பெரிய மருத்துவரிடம் போய் பார்க்கையில் காலில் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு நீண்ட ஓய்வு தேவை என்றும் கூறுகின்றனர்.
தனது எதிர்காலம் அவ்வளவு தானா? கெரியர் முடிந்து விடுமா? என்ற அச்சத்தில் தவிக்கிறார். அதன்பிறகு மிகுந்த கடினப்பட்டு மனதை தேற்றிக் கொண்டு ஆபரேஷன் செய்து கொள்கிறார். அதில் புற்றுநோயும் குணமாகிவிட மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். தனக்கு நடிக்க வாய்ப்பு வரவில்லை என்றால் பரவாயில்லை. இதற்காக ஆர்வத்துடன் வருபவர்களுக்கு நான் வழிகாட்டுகிறேன் எனக் கிளம்புகிறார். பின்னர் ’300 பிஸ்டல்ஸ்’ என்ற பெயரில் நாடக கம்பெனி உருவாக்குகிறார். இனிமேல் இதுதான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வருகிறார். இந்த சூழலில் தான் Money Heist சீரியல் குழுவினர் ஆல்வரோ மார்டே-வை சந்திக்கின்றனர். எங்கள் சீரியலுக்கு நிறைய நடிகர்கள் தேவைப்படுகின்றனர். உங்கள் நாடக கம்பெனியில் இருந்து சிலரை எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்கின்றனர். சிலரை பரிந்துரை செய்கிறார்.
ஆனால் அந்த Professor கதாபாத்திரத்திற்கு மட்டும் யாருமே கிடைக்கவில்லை. ஆல்வரோ மார்டே-வும் பலரை பரிந்துரை செய்கிறார். ஆனால் யாரும் சரிபட்டு வரவில்லை. அப்போது Money Heist குழுவினர், ஏன் நீங்களே நடிக்கக் கூடாது என்று கேட்கின்றனர். இதற்கான ஆடிசனில் கலந்து கொண்டு தேர்வாகி விடுகிறார். சீரியலுக்கு முதன்மையான கதாபாத்திரம் கிடைத்துவிட்டது. அந்த இடத்தில் உச்சம் தொட ஆரம்பிக்கிறது ஆல்வரோ மார்டே-வின் வாழ்க்கை. பின்னர் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சீரியல் வெற்றி பெறுகிறது. நெட் பிளிக்ஸ் வழியாக உலக ரசிகர்களை கவர்ந்து விடுகிறது. நடிப்பில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ஆல்வரோ மார்டே ஒரு Professor தான்.





















Write a comment ...