சென்னையில் இருந்து பெங்களூரு சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் அதிகாலை 5 மணிக்கு வந்திறங்கினேன். கெங்கேரி செல்ல வேண்டும். லால் பாக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்து நடைபயணத்தை தொடங்கினேன். மழை முழுதாய் நிற்கவில்லை. சாரல் மழையில் நனைந்த படியே கூகுள் மேப் உதவியுடன் நடந்தேன். கிட்டதட்ட அரை மணி நேரம் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பின்னர் நடக்கக்கூடிய வாய்ப்பு. அளவில்லா மகிழ்ச்சி. ஸ்டேஷன் வந்தது. ஆனால் திறக்கப்படவில்லை. ஞாயிறு என்பதால் காலை 7 மணிக்கு தான் முதல் மெட்ரோ என்று அதிர வைத்தார்கள். வேறென்ன செய்வது? Cab புக் செய்தேன். அடுத்த 8வது நிமிடத்தில் நான் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது.
பயணம் இனிதே தொடங்கியது...
ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தேன். பெயர் வரதராஜு என்றார். தமிழ் தெரியுமா? என்றேன். இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் புரியும். ஆனால் கன்னடம், இந்தியில் மட்டுமே பேசத் தெரியும் என்று ஆங்கிலம் கலந்த கன்னடத்தில் பதிலளித்தார். அதன்பிறகான எங்களின் உரையாடல் கன்னடமும், தமிழுமாக சங்கமித்தது. வரதராஜு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபூரா பகுதியை சேர்ந்தவர். 1987ல் பிறந்திருக்கிறார். என்னவொரு நெருக்கம். அந்த காலகட்டத்தில் அவரது ஊரில் படிக்க பள்ளிக்கூடம் கிடையாது. சுமார் 12 கிலோமீட்டருக்கு மேல் செல்ல வேண்டுமாம். அதனால் பள்ளி வாசனையே தெரியாமல் அவரது பெற்றோர் வளர்த்துள்ளனர்.
பிறகென்ன...
ஒரு கையில் மாடும், மறு கையில் வேளாண்மையும் என வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். 12 வயதில் பெங்களூரு வந்தவர் பேக்கரி கடையில் வேலை, கார் கிளீனர் என படிப்படியாக வளர்ந்தார். ஒருகட்டத்தில் கார் ஓட்டுநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதையே முழுநேர தொழிலாக மாற்றிக் கொண்டார். சிறுக சிறுக பணம் சேர்த்து கொஞ்சம் கடன் வாங்கி Second Hand (மதிப்பு ரூ.1.5 லட்சம்) கார் ஒன்றும், புதிய Mahindra Xylo கார் (மதிப்பு ரூ.14 லட்சம்) ஒன்றும் வாங்கியுள்ளார். வார நாட்களில் பழைய காரும், வார இறுதியில் புதிய காரும் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவருக்கு ஸ்ரீரங்கம், வேலூர், சென்னை என ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கின்றனர். அதனால் மாதம் ஒருமுறை தமிழகம் வந்து விடுவார்.
பெங்களூருவில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கினால் இரவு 11 மணி வரை தொடர்ந்து வேலை செய்வாராம். இவரது மனைவி கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிகனிக்கோட்டையை சேர்ந்தவர். அவரும் கன்னடம் தான். இவர்களுக்கு நிஹல் ராஜு (பால்கோவா) என்ற 12 மாதக் குழந்தை இருக்கிறார். அப்படியே சினிமா பக்கம் திரும்பினோம். தீவிர தல அஜித் ரசிகர் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்தார். அவருடைய நடை, உடை, அலங்காரம் என அனைத்தையும் தீவிரமாக பின்பற்றி வருகிறாராம். விஜய் கூட தந்தையின் அறிமுகத்தால் திரையுலகில் கால் பதித்தார். ஆனால் அஜித் அப்படியில்லை. ஏராளமான கஷ்டங்கள், தோல்விகள் மூலம் இந்தளவிற்கு உயர்ந்திருப்பதாக விளக்கம் கொடுத்தார்.
அஜித் படத்தை 1,000, 1,500 ரூபாய் வரை கொடுத்து பிளாக் டிக்கெட் வாங்கி முதல் நாள், முதல் ஷோ பார்த்துவிடுவது வழக்கமாம். மற்ற படங்கள் எதுவும் பார்க்க மாட்டாராம். யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் -2 மெகா ஹிட் ஆனது பற்றி கேட்டேன். படம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் யஷ் தனக்கு பிடிக்காது என்றார். அவர் வீட்டிற்கு ரசிகர்கள் சென்றால் பார்க்கக் கூட வர மாட்டாராம். கன்னடத்தில் சுதீப் தான் பிடித்த நடிகர் என்று கூறினார். பணி நேரத்தில் பாடல்கள் மட்டுமே பொழுதுபோக்கு.
கானா பாலாவின் தீவிர ரசிகர் என்று கூறி சர்ப்ரைஸ் கொடுத்தார். தமிழர்கள் எந்தவொரு விமர்சனமாக இருந்தாலும் நேரடியாக, பட்டென தெரிவித்து விடுகின்றனர். இந்த விஷயம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். இந்த நீண்ட உரையாடலால் வரதராஜுன் ரசிகனாக மாறிப் போனேன். வாழ்க்கையின் கீழ்மட்டத்தில் இருந்து கடின உழைப்பால் முன்னேற்றம் கண்ட ஒரு ஹீரோவை சந்தித்த உணர்வு. அவரிடம் இதை தெரிவித்து ஆசையாய் ஒரு செல்ஃபி எடுத்து கொண்டேன். எல்லாம் நல்லதாய் நடக்கட்டும். உடல்நலனை பார்த்துக் கொள்ளுங்கள் என்றதுடன் எங்கள் உரையாடல் முடிந்தது. வாழ்க்கை இப்படித்தான் பன்முகங்கள் கொண்டது. இன்னும் பல முகங்களுக்காக காத்திருப்போம்.
Write a comment ...