நம் தமிழ் உறவுகளுக்குள் குடும்பத்தை தாண்டி தாய்மை, சகோதரத்துவம், நட்பு உள்ளிட்ட பிணைப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு மதம், நிறம், மொழி, தேசம் என்ற பேதங்கள் கிடையாது. எனவே எல்லை தாண்டி பல ஆயிரம் மைல்கள் பயணிக்கும். அப்படி கடவுளின் தேசத்தில் இருந்து எனக்கு கிடைத்த சகோதரத்துவ பிணைப்பு அற்புதமானது. பெங்களூருவில் உள்ள Times Internet நிறுவனத்தில் சக ஊழியர்களாக தொடங்கிய எங்களின் பயணமானது நட்பு, சகோதரத்துவம், தங்கை என்று படிப்படியாக நெருக்கத்தை கூட்டியது. மலையாள நண்பர்களை பொறுத்தவரை அவர்களுக்குள் உருவாகும் பிணைப்பு மிகவும் வலுவானது. அது கேரளா தாண்டி வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் சரி. நாடாக இருந்தாலும் சரி. அப்படித் தான் பெங்களூருவில் எனது அலுவலகத்தில் பணிபுரிந்த மலையாள நண்பர்களை பார்த்து வியந்திருக்கிறேன். அவ்வளவு ஒற்றுமை.
அவர்களில் ஒருவராக எனக்கு அறிமுகமானவர் Amalu Sathyan. டீ சாப்பிட, ஸ்நாக்ஸ் சாப்பிட, மதிய உணவு சாப்பிட, பணி முடிந்து வீட்டிற்கு திரும்புவது என பல்வேறு தருணங்களை ஒன்றாக கழிக்க நேர்ந்தது. முதல்முறை நாங்கள் வெளியே சென்றது Trinity Circle-ல் எங்கள் அலுவலகத்தின் அருகே உள்ள "0 KM Goa" என்ற ஓட்டல். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கு எங்கள் மேலாளர் Sharon Supriya-க்கு மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதன்பிறகு அலுவலகத்தில் ஒவ்வொரு பண்டிகையையும் அலங்காரம், தின்பண்டம் என மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். அப்படி கிடைத்த நிமிடங்கள் என்னை தமிழ் அண்ணன் ஆகவும், அவரை மலையாள தங்கை ஆகவும் மாற்றியது. அதன்பிறகான எங்களின் உரையாடல் ஒரே குடும்பத்தை சேர்ந்த உடன்பிறப்புகளாகவே தொடர வைத்தது. அண்ணன் என்று என்னை தமிழில் அழைக்கும் போதும், Aniyathi என்று நான் மலையாளத்தில் அழைக்கும் போதும் நெகிழ்வூட்டும் கண நேரமாய், மனதை உருக்கும் நிகழ்வாய் மாறின.
அந்த சமயத்தில் வந்த Raksha Bandan நாளில் அவருக்கு ராக்கி கட்டியிருக்கிறேன். அன்பின் வெளிப்பாடு எந்த முறையில் இருந்தால் என்ன? பிறர் மனம் வாடாது செய்யும் எதுவும் தவறில்லை. எங்களின் ஒன்றிணைந்த பயணம் 8 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குள் மேல்படிப்பு, வேறொரு வேலை என Amalu Sathyan புறப்பட்டு விட்டாள். கடைசி நாளில் நான்கைந்து Gifts வாங்கி கை நிறைய அள்ளிக் கொடுத்து வழியனுப்பி வைத்ததை மறக்க முடியாது. Book செய்த Cab வந்தவுடன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி சென்றாள். நான் மேலே ஏறிச் சென்றேன். மூன்றாவது மாடியில் இருந்த என்னிடம் இருந்து கனத்த இதயத்துடன் விடை பெற்றுக் கொண்டாள். அதன்பிறகு எப்போதாவது Message, Call என மாதங்கள் ஓடின. என்னுடைய திருமணம், மகன் பிறந்தது, பெங்களூருவில் குடியேறியது என பல்வேறு காலகட்டங்களில் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது.
Write a comment ...