புது ரத்தம் பாய்ச்சிய நாகெல்ஸ்மேன்... டார்டன் ஆர்மியை துவம்சம் பண்ண ஜெர்மனி

உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாக்களில் ஒன்று. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான பார்வையாளர்களை கொண்ட தொடர். உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளை கொண்ட கண்டத்தின் விளையாட்டு திருவிழா. யூரோ 2024 தொடர் கோலாகல கொண்டாட்டங்கள் உடன் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளது. இம்முறை ஒட்டுமொத்த தொடரின் போட்டிகளும் நடைபெறும் நாடு ஜெர்மனி.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் நேரடியாக தகுதி பெற்று விட்டது. அதுமட்டுமின்றி தொடரின் முதல் போட்டியில் விளையாடும் தகுதியும் பெற்றது. ஜெர்மனி கால்பந்து அணியில் ஹாட் டாபிக்காக இருப்பவர் மேனேஜர் ஜூலியன் நாகெல்ஸ்மேன். 36 வயதே நிரம்பிய நாகெல்ஸ்மேனின் கோச்சிங் ஸ்டைல் ஜெர்மனி அணி வீரர்களுக்கு மிகவும் பிடித்து போனது. குறிப்பாக டோனி க்ரூஸை மீண்டும் அணிக்கு அழைத்து, கை ஹாவெர்ட்ஸ் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட பலம் வாய்ந்த ஃபார்வர்டை அமைத்தார்.

ஜெர்மனிக்கு டோனி க்ரூஸ் சரிப்பட்டு வர மாட்டார் எனக் கூறி நபர்களை வியப்பின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தும் வகையில் ஃபார்மிற்கு கொண்டு வந்தார். ஜூன் 15, 2024. முனிச் நகரில் உள்ள அல்லைன்ஸ் அரீனா மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ஜெர்மனி, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. நாகெல்ஸ்மேன் எந்த அளவிற்கு தரமான உருவாக்கி இருக்கிறார் என்பதற்கு முதல் பாதியே சரியான உதாரணம்.

போட்டி தொடங்கிய 10வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணியின் பாக்ஸிற்கு அருகே வலது விங்கில் பாலை ரிசீவ் செய்த கிம்மிச் தனது ரைட் ஃபூட்டில் உதைத்து மிட் விங்கிற்கு அனுப்பி வைத்தார். அங்கு ஓடி வந்த ஃப்ளோரியன் விர்ட்ஸ் பாலை ரிசீவ் செய்வதற்குள் வந்த வேகத்தில் ரைட் ஃபூட்டில் உதைத்து சென்டர் பாக்ஸில் தள்ளி அற்புதமாக கோலாக்கினார்.

19வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணியின் பாதிக்குள் இரண்டு அணிகளும் நுழைந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பாக்ஸிற்கு மிக அருகில் நுழைந்த கை ஹாவர்ட்ஸ் லெப்ட் விங்கில் இருந்தபடி லாவகமாக பந்தை நகர்த்தி கொண்டிருந்தார். ஆனால் ஸ்காட்லாந்து வீரர்கள் அங்கும், இங்கும் போக்கு காட்டியதால் உடனே சென்டர் விங்கிற்கு ஓடி வந்த மூசியாலாவிடம் பந்தை அனுப்பினார். அவர் ரைட் ஃபூட்டில் பந்தை தூக்கி அடிக்க பாக்ஸின் சென்டரை நேரடியாக பதம் பார்த்து கோலாக மாறியது.

45வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து பாக்ஸில் ஜெர்மனி கேப்டன் குண்டோகன் பால் பொசஷனில் இருக்க, ரியான் போர்டியஸ் காலை தட்டிவிட விஷயம் சீரியசானது. VAR Check-ல் அட்டாக்கின் தீவிரத்தை அறிந்த ரெஃபரீ, உடனே ரெட் கார்டு கொடுத்து போர்டியஸை வெளியேற்றினார். அதுமட்டுமின்றி பெனால்டியும் அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பு கை ஹாவர்ட்ஸிற்கு அளிக்கப்பட கச்சிதமாக பாக்ஸின் லெப்ட் சைடில் அடித்து கோலாக்கினார்.

68வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து பாக்ஸின் லெப்ட் சைடில் நுழைந்த மூசியாலா, பாலை சென்டர் பாக்ஸிற்குள் தள்ளினார். அங்கு கச்சிதமாக ரிசீவ் செய்த குண்டோகன், சட்டென்று பின்னங்காலில் பந்தை தள்ள உடனே நிக்லஸ் ஃபுல்க்ரக் ரைட் ஃபூட்டில் பாக்ஸின் சென்டரில் அடுத்து கோலாக்கினார்.

87வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் பாக்ஸிற்குள் பந்தை தடுக்கும் முயற்சியில் அண்டோனியோ ருடிகர் செய்த தவறு ஓன் கோலாக மாறி ஏமாற்றம் அளித்தது.

92வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் பாஸ் செய்த பந்தை லெப்ட் விங்கில் இருந்து லாங் பூட்டில் எம்ரி கேன் அடித்த பந்து யாரிடமும் சிக்காமல் அப்படியே வளைந்து சென்று கோலானது.

யூரோ 2024 தொடரின் முதல் போட்டியில் டார்டன் ஆர்மி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டிய ஸ்காட்லாந்து அணியின் அத்தனை முயற்சிகளும் வீண். மேனேஜர் ஸ்டீவ் கிளார்க்கின் வியூகங்கள் எதுவும் எடுபடவில்லை.

2022 ஜூனில் நடந்த யூரோ நேஷன்ஸ் லீக் தொடரில் இத்தாலி அணிக்கு எதிராக 5-2 என ஜெர்மனி வென்றிருந்தது. அதன்பிறகு மிகப்பெரிய வெற்றியை யூரோ 2024ல் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஜெர்மனி அசத்தியுள்ளது.

Write a comment ...

Write a comment ...